Douglas
செய்திகள்அரசியல்இலங்கை

பிரதேச அபிவிருத்தியினை முதன்மைப்படுத்தும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டம் – டக்ளஸ் தேவானந்தா

Share

தேசிய உற்பத்தியை இலக்காகக் கொண்ட பிரதேச அபிவிருத்தியினை முதன்மைப்படுத்தும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் யுத்தத்திற்கு முன்னர் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட அனைத்து காணிகளிலும் வேளாண்மை செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும். யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருப்போர் விரும்புகின்றபோது நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடற்றொழில்சார் அபிவிருத்திக்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கு மாகாணத்திற்கான நிலைபேறான கடற்றொழில் அபிவிருத்தியையும் நீர் வேளாண்மை தொடர்பில் மிக அதிகளவிலான செயற்றிட்டங்களை நாடளாவிய ரீதியிலும் மேற்கொள்ளப்படும்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பாக இன்று(17.11.2021) நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“மூவாயிரம் மில்லியன் ரூபா கடற்றொழிலுக்கென வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வருடத்தில் இரண்டு இலட்சம் ஹெக்டயர் நீர் நிலைகளில் நன்னீர் வேளாண்மைக்கான வசதிகளை மேற்கொள்வதற்கும், அதனடிப்படையில் 196 மில்லியன் மீனின குஞ்சுகள் வைப்பிலிடப்பட்டு, அதன்மூலம் சுமார் 18 ஆயிரம் மில்லியன் பெறுமதியான 125 ஆயிரம் மெற்றிக்தொன் அறுவடையை பெற்றுக்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திற்கான நிலைபேறான கடற்றொழில் அபிவிருத்தித் திட்டம், கடற்றொழில் துறைமுக அபிவிருத்திகள், நீர்வள ஊக்கம் (தியவர திரிய) கடன் திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பு, பலநாட் கலங்களுக்கான வழித்தட கண்காணிப்புக் கருவிகள், கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மைகளில் ஈடுபடுகின்ற மக்களின் வாழ்வியலை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், மேலதிகமாக 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதால், அடுத்த வருடத்தில் நீர்வேளாண்மை தொடர்பில் மிக அதிகளவிலான செயற்றிட்டங்களை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

காணி அமைச்சுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி மானியத்தில், இயற்கை அனர்த்தங்கள் காரணமாக காணி இழப்புகள் ஏற்படுகின்றவர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்குவதென்பது நல்லதொரு திட்டமாக அமைகின்றது.

காணிப் பிணக்குகள் தொடர்பான பிரச்சினைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றை விரைந்து தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எமது பகுதிகளிலே நீண்டகால இடப்பெயர்வுகள் காரணமாக பயன்பாட்டு நிலங்கள் மற்றும் குடியிருப்பு காணிகள் என்பன காடுமண்டிக் காணப்படுகின்றன. அத்தகைய நிலங்கள் வன இலாக்கா அல்லது வனஜீவராசிகள் திணைக்களங்களின் ஆளுகைக்கு உட்பட்ட நிலங்களாக கணிக்கப்பெற்று வருகின்றன. அந்த நிலங்களில் எமது மக்கள் யுத்தத்திற்கு முற்பட்ட காலங்களில் பல்வேறு பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

எனவே, அவ்வாறு இனங்காணப்படுகின்ற நிலங்களில், சூழல் மற்றும் வன ஜீவராசிகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் மண் வேளாண்மை மற்றும் நீர்வேளாண்மை செய்கைகளில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்திற்கான அண்மைய விஜயத்தின்போது, பல்வேறு கடற்கரையோர பகுதிகள் கடலரிப்புக்கு உட்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அப்பகுதிகளில் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளையும் கடலரிப்பிலிருந்து பாதுகாப்பதற்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இதுவரையில் மீளக்குடியேறாமல் இருந்து வருகின்ற குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்கென 1,259 மில்லியன் ரூபாவும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேலும் 1,200 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கும், யாழ் நகர சபைக் கட்டிட நிர்மாணிப்பிற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் இருந்து நாட்டுக்கு திரும்ப விரும்புகின்றவர்களுக்கும் மீள்குடியேற்றத்திற்கான வசதிகளை வழங்க முடியும். நாட்டிற்கு வரவிரும்புகின்றவர்களை அழைத்து வருவதற்கான ஒழுங்கு முறைகள் தொடர்பாக இந்திய இராஜதந்திர தரப்புக்களுடன் கலந்துரையாடி வருகின்றேன்.

கைத்தொழிற்துறையை பொறுத்தமட்டில், திருகோணமலை கைத்தொழிற்பேட்டை உள்ளடங்கலான மேம்பாடுகள் மற்றும் ஏறாவூர் விசேட புடவை உற்பத்தி வலய உருவாக்கம் எமது பகுதிகளுக்கு முக்கியத்துவங்களாக அமைகின்றன. ஏறாவூர் புடவை உற்பத்தி வலயம் என்பது நீண்டகால எதிர்ப்பார்ப்புகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்சாரத்துறை தொடர்பில் பார்க்கின்றபோது, மன்னார், முசலி, கிளிநொச்சி, பூநகரி போன்ற பகுதிகளில் கலப்பு, புதுப்பிக்கத்த மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுவதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

துறைமுகங்களைப் பொறுத்தவரையில், காங்கேசன்துறை இறங்குதுறை பணிகளுக்கென 797 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்துறைமுகம் அபிவிருத்தியடையும் நிலையில் இந்தியாவில் இருந்து நேரடியாகவே எமது பகுதிக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கலாக ஏனைய தேவைகளுக்கேற்ற பொருட்களையும் கொண்டு வருவதன் மூலம் குறைந்த விலையில் இலகுவாக அவற்றை கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்பு எமது மக்களுக்கு ஏற்படும்” என்று தெரிவித்தார்.

அதேபோன்று சமுர்த்தி பயனாளிகள் பட்டியலை மீளாய்வுக்கு உட்படுத்துவது, காணாமற்போனோர் விவகாரத்திற்கு பரிகாரம் காண்பதற்கான ஒரு மனிதாபிமான செயலாக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை, ஆசிரியர் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளுக்கான தீர்வு, குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஏற்பாடுகள், இரசாயணப் பசளைகளுக்கு பதிலாக சேதனப் பசளைகளை பயன்படுத்தும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வரவு – செலவுத் திட்டமானது படிப்படியாக வெளிநாட்டு இறக்குமதி மோகத்திலிருந்து விடுபட்டு, தேசிய உற்பத்தியின்பால் மக்கள் நாட்டம் கொள்ள வேண்டியது அவசியத்தினை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1647574276 3019
செய்திகள்இந்தியா

பகவத் கீதையின் செய்தியை உலகமயமாக்கும் முயற்சி: 50க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது!

பகவத் கீதையின் செய்தியை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சகம் முயற்சிகளை...

DSC 4271
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலை யாத்திரை: பொலித்தீன் இல்லாத தூய தளமாகப் பராமரிக்கத் திட்டம்!

எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை (Sri Pada Pilgrimage) அடிப்படையாகக்...

DSC 4271
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா சிங்கர் காட்சியறையில் பயங்கர தீ விபத்து: முழுமையாக எரிந்து சேதம்!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் (Singer) இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (நவம்25) காலை...

25 68ee64d88d4b3
செய்திகள்இலங்கை

இலங்கையில் பலத்த மழை நீடிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவம் 25) புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக...