செய்திகள்
வெளிநாடு செல்பவர்கள் பைஸர் பெற்றுக்கொள்வது அவசியம்!
மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்பவர்கள் பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அத்தியாவசியம் என, வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொதுமுகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
இதுவரை, தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்கு செல்வதற்காக வேலைவாய்ப்புப் பணியகத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் பதிவு செய்துகொண்டுள்ளனர் எனவும், இவர்களில் முதற் கட்டமாக சுமார் 8 ஆயிரம் பேருக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஏனையோருக்கும் பைஸர் தடுப்பூசியைப் பெற்றுத்தருமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதவிர, சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட இலங்கை பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக, பைசர் தடுப்பூசியைப் பெற்று தமது நாடுகளுக்கு வருமாறு, கட்டார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வௌிநாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்ல எதிர்பார்த்துள்ளோருக்கு கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை, இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்படுவதாகவும், தடுப்பூசி ஏற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள திகதி மற்றும் நேரம் என்பவற்றை மாத்திரம் கருத்தில் கொண்டு, வைத்தியசாலைக்கு வருகை தருமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.
You must be logged in to post a comment Login