செய்திகள்
ஆயுத கடத்தலுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு! – இந்தியா குற்றச்சாட்டு
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுத கடத்தலுடன் தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.
இதன்படி, ஆயுதங்கள், போதைப் பொருள் மற்றும் துப்பாக்கி ரவைகள் கடத்தல்களுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக இந்திய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் இலங்கை மீன்பிடிப் படகு ஒன்றில் இவ்வாறு ஆயுதங்கள் கடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்த கடத்தல்களில் ஈடுபட்டதாக தெரிவித்து சுரேஸ் ராஜ் மற்றும் சௌந்தராஜ் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளபட்ட விசாரணையில் அவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்பது தெரியவந்துள்ளது என இந்தியாவின் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த இருவரும் தமிழீழ விடுதலைப் புலி செயற்பாடுகளை இரகசியமாக முன்னெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், தமிழகம், இலங்கை மற்றும் ஏனைய உலக நாடுகளின் புலி தலைவர்களின் மேற்பார்வையின் கீழ் இவர்கள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதி இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினர் அரேபிய கடலில் வைத்து இலங்கை மீன்பிடிப் படகினை கைப்பற்றியிருந்தனர்.
இந்த படகில் போதைப் பொருள், துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்த படகில் பயணித்த ஆறு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வழக்கு விசாரணைகள் இந்திய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் போதைப்பொருள், தங்க கடத்தல் மற்றும் ஹவாலா நடவடிக்கைகள் மூலம் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காக குற்றம் சாட்டப்பட்டவர் நிதி சேகரித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login