ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி முடிவு – எச்சரித்துள்ள சீனா!

robo

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சீனாவில் தயாரிக்கப்படும் புதிய தரவுமைய சாதனங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க திட்டமிட்டு வருகிறது.​

செயற்கை நுண்ணறிவு துறையின் அசுர வளர்ச்சியை அடுத்து, நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு அமைப்புகளைப் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

​அத்துடன், தரவுகளை ஃபைபர்-ஒப்டிக் கேபிள்கள் மூலம் அதிவேகமாக அனுப்ப உதவும் ‘ஒப்டிகல் டிரான்சீவர்ஸ்’ என்ற சீன தரவு மைய சாதனங்களுக்கு தடை விதிக்க அமெரிக்க தகவல் தொடர்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துவருகிறது.

அமெரிக்க தரவு மையங்களில் இருந்து சீன நிறுவனங்கள் தரவுகளைத் திருடுவதையும், வைரஸ் அல்லது தீம்பொருள்களை நிறுவுவதையும், சேவைகளை முடக்குவதையும் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடையால் சீன நிறுவனமான ‘ஜாங்ஜி இன்னோலைட்’ பெரிதும் பாதிக்கப்படக்கூடிய அதேவேளையில், அமேசான் போன்ற அமெரிக்க கிளவுட் சேவை நிறுவனங்களுக்கான செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்ட வொஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம், “சீன நிறுவனங்கள் மீதான வீண்பழி சுமத்துதலையும் தடைகளையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும், எங்கள் நாட்டின் நலன்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்” எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version