பசிபிக் பெருங்கடலில் உருவான ‘டொல்பின்’ தீவிர சூறாவளி ஜப்பானை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருவதுடன், அது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த, சூறாவளியானது மணித்தியாலத்திற்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடியதென ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுடன், பொனின் தீவுகளை ஏற்கனவே கடந்துள்ள இந்த சூறாவளி, வார இறுதியில் ஒகினாவா தீவில் முழுமையாகக் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஏற்படும் கடல் அலை சீற்றம் மற்றும் பலத்த காற்று காரணமாக விமானம் மற்றும் படகுப் போக்குவரத்துகள் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த சூறாவளியின் தாக்கம் காரணமாக தாய்வானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், சீனா ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை மற்றும் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், சில இடங்களில் மின் தடை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு உள்ளூர் நிர்வாகங்கள் வலியுறுத்தியுள்ளன.

