நல்லாட்சியின்போது ‘வெள்ளிக்கிழமை’ என்றாலே நாட்டில் பரபரப்பாக ஏதாவது சம்பவம் அரங்கேறும். ஏதேனும் தீர்மானங்களை வெள்ளிக்கிழமை அன்றே அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன எடுப்பார்.
அவ்வாறு தீர்மானம் எடுத்து, வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு, நாட்டு மக்களையும், அரச கட்டமைப்பையும் தெறிக்கவிடுவார். விலை உயர்வுகள் உட்பட சில அறிவிப்புகள்கூட பெரும்பாலும் வெள்ளிக்கிமையே வெளிவரும். இதனால் ‘ப்ரைடே புல்லட்’ என்றுகூட சமூகவலைத்தளங்களில் அவர் விமர்சிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமையும் விசித்திர நாளாக – புதுமை அரங்கேறும் தினமாக பார்க்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டுடன் மைத்திரி யுகம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த ‘வெள்ளிக்கிழமை’ சம்பவத்தை மீண்டும் ஒருமுறை நாட்டு மக்களின் விழித்திரை முன் கொண்டுவந்துள்ளது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு.
அதாவது ஒரே நாளில் பல பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளதுடன், அதிகளவு விலை உயர்வு இடம்பெற்ற சந்தர்ப்பமாகவும் வரலாற்று ஏற்பட்டில் இன்றைய விலை உயர்வு இடம்பிடித்துள்ளது எனலாம்.
இலங்கையின் பொருளாதாரம் ஏற்கனவே ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றானது அதற்கு மரண அடியாக அமைந்தது.அதன் பின்னர் ஏற்பட்ட தாக்கங்களால் அரசு விழிபிதுங்கி நின்றது. நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டது.
நாட்கள் செல்ல, செல்ல நெருக்கடி நிலைமை தீவிரமடைந்தது. அந்திய செலாவணி கையிருப்பும் ஆட்டம் கண்டது. இதனால் இலங்கையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்குகூட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த வரிசை நிலை இன்றளவிலும் தொடரவே செய்கின்றது.
முதலில் தட்டுப்பாடு, அதன்பின்னர் வரிசை, இறுதியில் விலையேற்றம் என்ற சூத்திரத்தையே அரசும் பின்பற்றி வந்தது – தற்போதும் வருகின்றது.
இலங்கையில் அவ்வப்போது எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறைதான் ஒரே தடவையில் அதிகளவு விலை உயர்வு இடம்பெற்றுள்ளது என வாகன சாரதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
லங்கா ஐஓசி நிறுவனம் ஒரு லீற்றர் டீசல் விலையை 75 ரூபாவாலும், ஒரு லீற்றர் பெற்றோல் விலையை 50 ரூபாவாலும் அதிகரித்துள்ளது.
ரஷ்யா, உக்ரைன் மோதலால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. இதனால் இந்திய நிறுவனமான லங்கா ஐஓசி கடந்த சில நாட்களில் மாத்திரம் இரு தடவைகள் விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளது.
இதனால் பெரும்பாலானவர்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நாடுகின்றனர். பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விரைவில் விலை அதிகரிப்பை மேற்கொள்ளும் என்ற சமிக்ஞையை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று வெளியிட்டார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 77 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 55 ரூபாவாலும் சுப்பர் டீசலின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றமானது நாட்டில் தொடர் சங்கிலி தாக்கத்தையே ஏற்படுத்தும்.
பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும். ஆரம்பக்கட்டணத்தை 30 ரூபாவாக நிர்ணயிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆட்டோ கட்டணமும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. பாடசாலை வேன் சேவை உட்பட இதர போக்குவரத்து சேவைகளிலும் விலை அதிகரிப்பு இடம்பெறவுள்ளது. இவற்றின் விலை உயர்வு நிச்சயம், ஏனைய விடயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதேபோல கோதுமை மாவின் விலையும் இன்று 35 முதல் 45 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவாலும், ஏனைய பேக்கரி உணவு பொருட்களின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் அறிவிப்பு விடுத்துள்ளனர். இலங்கை வரலாற்றில் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
அதேபோல எண்ணெய், மிளகாய் உள்ளிட்டவையின் விலையும் எகிறியுள்ளதால் சோற்று பார்சல் விலையும் 20 ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொத்து ரொட்டி உட்பட ஹோட்டல் உணவுகளின் விலையும் விரைவில் உச்சம் தொடும். அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இதற்கு மேலதிகமாக மருந்துகளின் விலையும் 29 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்படி விலை உயர்வு பட்டியலை நீடித்துக்கொண்டே செல்லலாம்.
கொரோனா பெருந்தொற்று, உக்ரைன், ரஷ்யா மோதல் என்பன இவற்றில் தாக்கம் செலுத்தினாலும், முழுமையான காரணம் இவை இரண்டும் என்று மட்டும் குறிப்பிட முடியாது.
அரசின் முறையற்ற பொருளாதாரக் கொள்கையும், தளம்பல் போக்கிலான நிதிக்கொள்கையுமே பிரதான காரணங்கள் என எதிரணிகளும், பொருளாதார நிபுணர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டிய கதைபோல, ஏற்கனவே தவித்துக்கொண்டிருக்கும் இலங்கை மக்களுக்கு, இந்த விலையேற்றமானது, பெரும் தலையிடியாக அமையப்போகின்றது. நடுத்தர வர்க்கத்தினர் மீளா துயரத்துக்குள் விழும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
#Artical
Leave a comment