உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள அமெரிக்க- – இந்தியா உறவு எங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன். அமெரிக்கா – இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான ஆழமான உறவை வலுப்படுத்த இந்தோ– பசிபிக் பிராந்தியத்தை பராமரிப்பது தொடர்பில் அக்கறை செலுத்தவுள்ளேன்.
இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜோ பைடனை சந்தித்த பிரதமர் மோடி, இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பில் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதன் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இரண்டாவது நாளாக, வெள்ளை மாளிகை சென்றுள்ளார்.
அங்கு திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் பிரதமருக்கு உற்சாக வரவேற்பளித்துள்ளதுடன் பாரம்பரிய பரதநாட்டிய நடனமும் அரங்கேறியது.
பின் வெள்ளை மாளிகை சென்ற பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஜோ பைடனை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்
இந்தச் சந்திப்பின் போது வர்த்தகம் , பரஸ்பரம் நட்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்கையில்,
எனக்கும் எனது தூதுக்குழுவினருக்கும் அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றி. இந்தியா – அமெரிக்க இருதரப்பு உறவுகளுக்கு உங்களின் முழு அக்கறை எமக்குத் தேவை.
கொரோனா வைரஸ் தொற்று குறைப்பு மற்றும் பருவநிலை மாற்ற பிரச்சினைகளில் உங்களது பங்கு அளப்பரியது.
மேலும் இந்திய – அமெரிக்கா இடையே வர்த்தக உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருவருக்கொருவர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்தியாவின் பல விடயங்கள் அமெரிக்காவுக்கு பயனுள்ளதாக அமையும். வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மேம்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோபைடன்,
உலகளாவிய சவால்களை தீர்க்க அமெரிக்க – இந்தியா உறவு எங்களுக்கு உதவும் என்று நான் நீண்ட காலமாக நம்புகிறேன். அமெரிக்கா – இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான ஆழமான உறவை வலுப்படுத்தவும், சுதந்திரமான மற்றும் வெளிப்படையான முறையில் இந்தோ–பசிபிக் பிராந்தியத்தை பராமரிப்பது தொடர்பில் அக்கறை செலுத்துவேன்.
கொரோனா பாதிப்பு முதல் காலநிலை மாற்றம் வரை பல்வேறு பிரச்சனைகளை இணைந்து எதிர்கொள்வது குறித்து விவாதிக்கவுள்ளோம் என ஜோ-பைடன் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment