இலங்கையின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், குடும்ப அரசியல் மயப்படுத்தப்பட்ட சூழலுக்குள்ளும் தள்ளப்பட்டு இலங்கையின் பொருளாதாரம் இன்று நாணயத்தாள்களை அச்சிடுகின்ற பொருளாதாரமாக மாறியிருக்கிறது.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறைகளைக் கொண்ட முன்பள்ளியினைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தினமும் நாணயத்தாள்களை அச்சிடுவதும், அதுமட்டுமல்லாமல் விலைவாசிகளை நாள்தோறும் உயர்த்துவதுமே தற்போதைய அரசின் செயற்பாடாக அமைந்துள்ளது. இது ஆரோக்கியமான விடயமல்ல.
நாட்டில் அரசிடம் இருக்க வேண்டிய கையிருப்பின்றி, வறுமையையும், பட்டினியையும் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதேபோல் இன்று இலங்கையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் அதிகமான பட்டினியை நோக்கி இந்த நாடு நகரப் போகிறது என்பதனை இந்நாட்டின் குடும்ப அரசியலில் அங்கத்தவராக இருக்கின்ற சமல் ராஜபக்ஸவே சுட்டிக்காட்டியிருக்கிறார்.
நீங்கள் சோறு இல்லை என்றால் மரவள்ளிக்கிழங்கை சாப்பிடுங்கள் என்று அறுபதாம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வார்த்தைகளை 70 ஆண்டு காலப்பகுதியில் நடந்த சம்பவங்களை மீண்டும் நினைவுபடுத்தும் விதமாக சமல் ராஜபக்ஸ கூறியிருக்கிறார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews