அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்த முன்னெடுப்புகள் முறையாகத் திட்டமிடப்படாமல் “ஆபாசமாக்கப்பட்டுள்ளதாக” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். மீரிகம பகுதியில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் COPPA, ஐக்கிய இராச்சியத்தின் Children’s Code மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் GDPR போன்ற சட்டங்கள் பிள்ளைகளின் இணையவழிப் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. ஆனால், இலங்கையின் புதிய சீர்திருத்தத்தில் இத்தகைய பாதுகாப்பு வழிமுறைகள் எவையும் உள்வாங்கப்படவில்லை.
முறையான கலந்துரையாடல்கள் இன்றி, ‘White Paper’ அல்லது ‘Green Paper’ போன்ற ஆவணங்களை முன்வைக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டதால் கல்வித் திட்டம் இன்று ஆபாசமாகியுள்ளது. இதற்குப் பிரதமரும், கல்வி அமைச்சரும், அதிகாரிகளும் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும்.
புதிய சீர்திருத்தத்தில் வரலாறு பாடத்தைக் கட்டாயப் பாடமாக்காமல் இருப்பது மற்றொரு பாரிய தவறு என அவர் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தில் வெறும் பதவி விலகல்கள் தீர்வாகாது. தவறு எங்கு நடந்தது? யார் பொறுப்பேற்பது? என்பது குறித்து வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தன்னிச்சையாகவும் “தலைக்கனமாகவும்” முடிவுகளை எடுக்காமல், கல்வியலாளர்கள் மற்றும் சமூகத்தின் கருத்துக்களுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும்.தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அவசியமானதுதான், ஆனால் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
“எமது நாட்டின் மிகவும் மதிப்புமிக்க வளம் மாணவ வளம். அவர்களின் உரிமைகளை மீறும் செயலுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்க முடியாது” என அவர் இதன்போது வலியுறுத்தினார்.