பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரிடம் கையடக்கத் தொலைபேசி மற்றும் பணம் ஆகியவற்றை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ஒருவரும் பெண் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் திருமணமாகாத பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது வீட்டிலிருந்து பணிக்குச் செல்வதற்கான விசேட அனுமதியை மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரிடம் பெறுவதற்குப் பரிந்துரை செய்யுமாறு கோரியுள்ளார். இதற்குப் பிரதிபலனாக குறித்த உயர் அதிகாரிகள் இலஞ்சம் கோரியுள்ளனர்.
இப்பரிந்துரையை வழங்க 72,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களைப் பல சந்தர்ப்பங்களில் இலஞ்சமாகப் பெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நுவரெலியா ASP அலுவலகத்தில் கடமையாற்றும் குறித்த அதிகாரி இன்று காலை 10.50 மணியளவில் கைது செய்யப்பட்டார். கல்முனை ASP அலுவலகத்தில் கடமையாற்றும் பெண் சார்ஜென்ட் இன்று மாலை 3.00 மணியளவில் அவரது அலுவலகத்திலேயே வைத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இருவரும் முறையே நுவரெலியா மற்றும் கல்முனை நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். பொலிஸ் துறையினரே சக ஊழியரிடம் இலஞ்சம் பெற்ற சம்பவம் பாதுகாப்புத் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.