உலக மக்கள்தொகை இவ்வாண்டு நவம்பர் 15ஆம் திகதி எட்டு பில்லியனை தொடும் என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற இடத்தில் சீனாவை இரண்டாம் நிலைக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும் என்று உலக நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
உலக மக்கள் தொகையில் இது ஒரு புதிய மைல்கல் என்று தலைமைச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் கூறினார்.
பூமியைக் காப்பதில் அனைவருக்கும் பொறுப்பு இருப்பதை நினைக்க வேண்டிய நேரம் இது. ஒருவருக்கு ஒருவர் உதவியாய் இருப்பதில் எங்கே தவறு நடக்கிறது என்பதையும் இப்போது எண்ணிப் பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
8 பில்லியனை நோக்கி விரைந்து நடைபோடும் மனித குலம் எண்ணிப் பார்த்துப் பெருமைப்பட வேண்டிய தருணங்களை அவர் சுட்டிக்காட்டினார். மருத்துவ முன்னேற்றம், நீண்ட ஆயுள், பிரசவத்தில் ஏற்படும் தாய்சேய் மரணங்கள் வெகுவாய்க் குறைந்திருப்பது ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொருவரும் வெவ்வேறானவர் என்பதைக் கொண்டாட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார் உலக நிறுவனத் தலைமைச் செயலாளர்.
1950 தொடக்கம் உலக மக்கள்தொகை வளர்ச்சி அதன் மெதுவான வேகத்தை காண்பிப்பதாக ஐ.நா பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.
உலக மக்கள் தொகை 2030இல் 8.5 பில்லியனாகவும், 2050 இல் 9.7 பில்லியனாகவும் 2080களில் அதன் உச்சமாக 10.4 பில்லியனாகவும் இருக்கும் என்றும் அதன் பின்னர் 2100 வரை அந்த நிலை நிலைத்திருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#WorldNews