இஸ்ரேல் செய்தது போர் குற்றமாக இருக்கலாம்..! ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையம் கவலை

9 1

இஸ்ரேல் செய்தது போர் குற்றமாக இருக்கலாம்..! ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையம் கவலை

காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர் குற்றமாக இருக்கலாம் என மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் படையினருக்கு இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக அழிக்கும் எண்ணத்தில் இஸ்ரேலிய ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலின் ஒருப்பகுதியாக காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நேற்று வான் தாக்குதல் நடத்தியது.

இந்த வான் தாக்குதலில் 47 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டு இருப்பதாகவும், பலர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் போர் குற்றமாக இருக்கலாம் என மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரிவு வெளியிட்ட அறிக்கையில் ஜபாலியா அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பொதுமக்களின் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.

பொதுமக்கள் உயிரிழப்புகளின் விகிதாசார அடிப்படையில் இஸ்ரேலின் இத்தகைய தாக்குதல் போர் குற்றங்களுக்கு சமமானதாக இருக்கலாம் என கவலை அளிப்பதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த தாக்குதல் ஹமாஸ் படையின் ராணுவ உள்கட்டமைப்புகள் மற்றும் சுரங்க பாதைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், இதில் ஹமாஸின் தளபதி மற்றும் அவரது கூட்டாளிகள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Exit mobile version