இலங்கை பேருந்தில் பயணிப்பது உயிருக்கு ஆபத்தானது: சுற்றுலா பயணி குற்றச்சாட்டு
இலங்கை பொது போக்குவரத்தில் பயணிப்பது ஆபத்தானது என்று ரஷ்ய சுற்றுலா பயணி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ரஷ்ய பயணி ஒருவர் சுற்றுலா செல்வதற்காக கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு வருவதற்கு பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, அவருக்கு நடந்த மோசமான அனுபவத்தை பற்றி பொலன்னறுவை சுற்றுலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடாக பதிவு செய்துள்ளார்.
அவர் கூறியது
இது குறித்து ரஷ்ய பயணி கூறுகையில், “பொலன்னறுவைக்கு சென்ற பேருந்து 95Kmph வேகத்தில் சென்றது. சில சாலைகளில் 100Kmph வேகத்தில் சென்றது. நான் எனது கூகுள் மேப் (Google Map) செயலியின் மூலம் பேருந்தின் வேகத்தை பதிவு செய்தேன்.
இதனால், பேருந்து ஓட்டுநரிடம் மெதுவாக ஓட்டுமாறு கூறினேன். ஆனால், அவர் இதுபற்றி கேட்கவில்லை. பேருந்து பறப்பது போன்று இருந்தது. பக்கவாட்டில் பேருந்தை வளைத்து அலட்சியமாய் பிற வாகனங்களை முந்திச் சென்றது. இது எங்களது உயிருக்கு ஆபத்தானது.
நான் இலங்கையை சுற்றி பார்க்க வந்தேன். எங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லக்கூடிய சாதாரண சாரதி தேவை. பைத்தியக்கார சாரதி வேண்டாம்.
ஒவ்வொரு முறையும் உயிரை பணயம் வைத்து பேருந்தில் பயணம் செய்வது இலங்கை மக்களுக்கு தெரியும். இலங்கையில் பேருந்தில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது” என்று பேசினார்.