இந்தோனேஷியாவின் ஆச்சே மாகாணத்தில் உள்ள பர்னி தெலோங் (Burni Telong) எரிமலை எந்நேரமும் வெடிக்கலாம் என்ற அபாயம் நிலவுவதால், அங்கிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
பெனர் மெரியா மாவட்டத்தில் அமைந்துள்ள 8,600 அடி உயரமான இந்த எரிமலையில், நேற்று முன்தினம் மட்டும் ஏழு முறை பலத்த அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இந்த அதிர்வுகள் எரிமலையைச் சுற்றியுள்ள 5 கி.மீ. தூரம் வரை உணரப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் முதல் இதன் செயல்பாடுகள் படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது மிகத் தீவிரமடைந்துள்ளது.
எரிமலையைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்குள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அந்நாட்டு புவியியல் ஆய்வு நிறுவனம் தடை விதித்துள்ளது.
எரிமலைக்கு மிக அருகில் உள்ள 3 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
120-க்கும் மேற்பட்ட உயிர்ப்புள்ள எரிமலைகளைக் கொண்ட இந்தோனேஷியாவில், பர்னி தெலோங் எரிமலையின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் 24 மணிநேரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.