நெதர்லாந்தின் குரோனிங்கன் (Groningen) நகரில் நடைபெற்ற உலக டைவிங் செஸ் (Diving Chess) செம்பியன்ஷிப் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த வீரர்களே முதலிடத்தைப் பிடித்து உலகளவில் சாதனை படைத்துள்ளனர்.
வழக்கமான சதுரங்கப் போட்டிகளைப் போலன்றி, இது மூளைக்கும் உடலுக்கும் சவால் விடும் ஒரு விளையாட்டாகும். வீரர்கள் நீச்சல் தடாகத்தின் அடியில் மூச்சைப் பிடித்துக்கொண்டு விளையாட வேண்டும்.
தண்ணீருக்கு அடியில் விளையாடுவதால் காந்தத் தன்மை கொண்ட பலகைகளும் (Magnetic boards), பாரமான காய்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு வீரர் தண்ணீருக்கு அடியில் மூழ்கி, ஒரே மூச்சில் ஒரு நகர்வை (Move) மேற்கொண்டுவிட்டு, மீண்டும் சுவாசிப்பதற்காக மேலே வர வேண்டும். மூச்சைக் கட்டுப்படுத்தும் திறன் மற்றும் நிதானம் ஆகிய இரண்டும் இதில் சோதிக்கப்படுகின்றன.
இம்முறை நடைபெற்ற உலக செம்பியன்ஷிப் போட்டியில் 40-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
நெதர்லாந்தின் முன்னாள் செம்பியனான சியோன் கோலன் (Zyon Kollen) உலக செம்பியன் பட்டத்தை வென்றார். நெதர்லாந்தைச் சேர்ந்த 17 வயதான ஜோசபின் டேமன் (Josephine Damen) உலக செம்பியனாக முடிசூட்டப்பட்டார்.
அமெரிக்க சதுரங்க வீரரான ஏடன் இல்ஃபெல்ட் (Etan Ilfeld) என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த ‘டைவிங் செஸ்’ விளையாட்டானது, அறிவுத்திறனுடன் உடல் வலிமையையும் இணைக்கும் ஒரு தனித்துவமான விளையாட்டாக தற்போது உலகளவில் பிரபலம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.