பஹ்ரைனில் பணிபுரியும் இந்திய மருத்துவர் இஸ்ரேலுக்கு ஆதரவு
இந்திய மாநிலம் கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் இஸ்ரேலுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளதால், அவரை பணியிலிருந்து மருத்துவமனை நிர்வாகம் நீக்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த மருத்துவர் சுனில் ராவ். இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பஹ்ரைனில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், ஹமாஸுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.
மேலும், இவருடைய கருத்துக்கள் மத ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக வலைதளங்களிலும் பேசுபொருளானது.
இந்நிலையில் பஹ்ரைனில் இருக்கும் ராயல் பஹ்ரைன் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இங்கு பணிபுரியும் மருத்துவர் சுனில் ராவ் சமூகத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டுள்ளார் என்பதை நாங்கள் அறிந்தோம்.
அவரின் கருத்துக்கள் முழுவதும் தனிப்பட்டவை. அதற்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கூறிய கருத்துக்கள் மருத்துவமனை கோட்பாடுகளுக்கு எதிராக இருப்பதால், சுனில் ராவை உடனடியாக வேலையிலிருந்து நீக்குகிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கு மருத்துவர் தனது தரப்பில் இருந்து, “நான் கூறிய சர்ச்சையான கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த நாட்டினுடைய மக்களையும், மதத்தையும் நான் நேசிக்கிறேன்.
ஒரு உயிரைக் காப்பாற்றுவது மருத்துவராக எனது கடமை. நான் இந்த மருத்துவமனையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் பஹ்ரைன் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” 50 வயதுடைய ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளோம். அவர் மதத்திற்கு எதிரான கருத்துக்களை கூறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
இதில் கைது செய்யப்பட்டது சுனில் ராவா என்பது குறித்த உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.