அண்டை நாடான பாகிஸ்தானின் தாக்குதலுக்குப் பிறகு, அரேபிய கடலில் பல இலக்குகளுக்கு எதிராக இந்திய கடற்படை பதிலடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன்.
ஜம்மு, பதான்கோட், உதம்பூர் மற்றும் வேறு சில இடங்களில் உள்ள இந்திய இராணுவ இலக்குகளை தாக்க பாகிஸ்தானின் முயற்சித்ததாகவும், அதனை ட்ரோன்கள் மூலம் இந்தியா முறியடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் முகமாக இந்திய கடற்படை தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகளுக்குப் பிறகு, “தனது இறையாண்மையைக் காக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது” என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுடனான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கராச்சி துறைமுகத்தை குறிவைத்து இந்தியா குறிப்பிடத்தக்க இராணுவ நடவடிக்கையை இதன்மூலம் மேற்கொண்டுள்ளது.
நேற்று இரவு தெற்கு பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் உள்ள துறைமுகப் பகுதிக்கு அருகில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், 1971 ஆம் ஆண்டு போருக்குப் பிறகு இந்திய கடற்படை பாகிஸ்தானுக்கு எதிராக நேரடிப் போர்முனையைத் திறந்திருப்பது இதுவே முதல் முறை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் எரிபொருள் இருப்புக்கள் மற்றும் கடற்படை சொத்துக்கள் பெருமளவில் இதன்போது சேதமடைந்ததாக இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.