“இந்திய மக்களின் அன்புப் பரிசு”… காசாவுக்கு உதவிப்பொருட்களை அனுப்பிய இந்தியா!
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான போருக்கு மத்தியில் காசா பகுதியில் கலவரத்தில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு இந்தியா ஞாயிற்றுக்கிழமை மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது கடந்த சனிக்கிழமை 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை தொடங்கினர்.
இதையடுத்து உடனடியாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, போர் பிரகடனத்தை இஸ்ரேல் அறிவித்தது.
ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்து செயல்படும் இடம் என தெரிவித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதன்போது இஸ்ரேலிய ராக்கெட்டுகளால் காசா நகரம் முழுவதும் சூறையாடப்பட்டது.
மேலும், நேற்றைய தினம் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை ஆறாயிரத்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்தியா மனிதாபிமான உதவிப்பொருட்களை காசாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.
உயிர் வாழத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய விமானத்தை இந்தியா அனுப்பியுள்ளது.
ஏறக்குறைய 6.5 டன் மருத்துவ உதவியும், 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களும் பாலஸ்தீனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன, அவை எகிப்து வழியாக நாட்டை அடையவுள்ளன.
எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையிலான ரஃபா எல்லைக் குறுக்கு வழியாக பாலஸ்தீனத்திற்கு பொருட்கள் அனுப்பப்படும்.
மனிதாபிமான உதவியில் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சை பொருட்கள், கூடாரங்கள், தூக்கப் பைகள், தார்ப்பாய்கள், சுகாதாரப் பயன்பாடுகள், நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் மற்றும் பிற தேவையான பொருட்கள் ஆகியவை அனுப்பட்டுள்ளது.
மேலும் இந்திய மக்களின் அன்புப் பரிசாக இது அனுப்பப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

