இந்திய இராணுவம், பாகிஸ்தான் வான் தளத்தில் தாக்குதல் மேற்கொண்ட போது, பாகிஸ்தானின் இராணுவ தலைவரான அஸிம் முனீர் பதுங்குகுழியில் ஒளிந்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்லாமாபாத் அருகே உள்ள நூர் கான் வான் தளத்தில் இந்திய ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட போது, பாகிஸ்தான் இராணுவத் தலைமை ஜெனரல் அஸிம் முனீர் அவசரமாக ராவல்பிண்டியில் உள்ள ஜெனரல் தலைமை தளபதியின் பதுங்குகுழிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்தியா மேற்கொண்ட தாக்குதல்களில் குறித்த தாக்குதல் மிகப்பெரியதாகவும், பாகிஸ்தானில் உள்ள 11 முக்கிய வான் தளங்களை ஒரே நேரத்தில் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் இந்திய லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கை குறிப்பிட்டார்.
இந்த தாக்குதலில் நூர் கான், முரித், சியால்கோட், பசுரூர், ஜேக்கோபாபாத் உள்ளிட்ட தளங்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன.
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாதிற்கு மிக அருகே நூர் கான் தளம் (10 கிமீ) அமைந்துள்ளதுடன், விமான போக்குவரத்து பிரிவுகள், எரிவாயு நிரப்பு யூனிட்டுகள், மற்றும் பாகிஸ்தான் வான் படையின் முக்கிய பயிற்சி மையங்கள் அங்குள்ளன.
மேலும், அங்கு நாடு முழுவதும் பரவியுள்ள அணு ஆயுதங்களை கண்காணிக்கும் ஸ்ட்ராடஜிக் பிளான்ஸ் டிவிஷனின் தலைமையகம் அருகில் உள்ளது.
சீனாவின் MIZAZVISION மற்றும் இந்தியாவின் Kawa Space வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களில், நூர் கான் தளத்தில் ஏற்பட்ட பாரிய சேதம் தெளிவாகப் பதிவாகியுள்ளது. எரிவாயு ட்ரக்குகள் மற்றும் களஞ்சியக் கட்டடங்கள் நாசமடைந்துள்ளன.
இந்த தாக்குதல், பாகிஸ்தானுக்குள் ஆழமாக இறங்கி தாக்கும் இந்தியாவின் திறன் குறித்து நாட்டில் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இரு அணு சக்தி நாடுகளும் பின்னர் நிலைதடுமாறாமல் சமாதானமாக இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த உடன்பட்டன.
இந்நிலையில், இந்தியா மேற்கொண்ட மிக முக்கிய தாக்குதல்களில் ஒன்றின் போது பாகிஸ்தான் இராணுவ தலைவர் பதுங்குழியில் மறைந்தமை தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.