கனடா குற்றவாளிகளின் கவசம்
மனித உரிமைகள் என்கிற பெயரில் கனடா “கொலையாளிகளுக்கு” அடைக்கலம் கொடுக்கும் நாடாக மாறியுள்ளதாக பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமன் குற்றம் சாட்டியுள்ளார்.
கனடா – இந்தியா இடையிலான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையிலேயே பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் இவ்வாறு இந்தியாவிற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே வெளியுறவு அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக் கூடாது. கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பம் கஷ்டத்தில் இருக்கும் போது, கொலையாளிகள் கனடாவில் தஞ்சமடைந்து அற்புதமான வாழ்க்கையை வாழ முடிகிறது.
கனடாவின் இந்த நிலைப்பாடு மற்றும் மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக அந்நாடு குற்றவாளிகளின் பாதுகாப்புக் கவசமாக மாறி வருகிறது என பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மனித உரிமைகள் பற்றிய கருத்து பலரால் பல நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவது உண்மையில் துரதிருஷ்டவசமானது.
ஏனெனில், கொலையாளிகள் மற்றும் பயங்கரவாதிகளை பாதுகாக்க மனித உரிமைகள் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவுடனும், கனடாவுடனும் நாங்கள் நல்ல உறவைக் கொண்டிருக்கிறோம். இரு நாடுகளும் எங்களுக்கு நண்பர்கள். எனினும் கனடா குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவிடக் கூடாது.
நாங்கள் சிலரை உடனடியாக நாடு கடத்துமாறு கனடா அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், துரதிருஷ்டவசமாக, அவர்கள் அப்பிரச்சனை குறித்து தற்போது எங்களிடம் பேசுவதில்லை என பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Comments are closed.