ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார் 17 வருடங்களாக நூற்றுக்கணக்கான பயணிகள் விமானங்களை இயக்கி வந்த முன்னாள் கேப்டன் ஒருவர் கனேடிய காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெப்ரி வால் (Geoffrey Wall – 59) என்ற இந்த முன்னாள் விமானிக்கு எதிராகப் போலி ஆவணங்கள் தயாரிப்பு மற்றும் பணமோசடி உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பீல் பிராந்திய காவல்துறையினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் விரிவான புலனாய்வுத் தகவல்களின்படி, சந்தேக நபரான ஜெப்ரி வால் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் ஏர் கனடா நிறுவனத்தில் உதவி விமானியாகத் தனது பணியைத் தொடங்கியுள்ளார். பின்னர் 2009 ஆம் ஆண்டில் அவர் பெரிய ரக விமானங்களை இயக்கும் முதன்மை கேப்டனாகப் பதவியுயர்வு பெற்றுள்ளார். ஒரு விமான நிறுவனத்தில் கேப்டன் பதவியை ஏற்பதற்கு ‘ஏர்லைன் டிரான்ஸ்போர்ட் பைலட் உரிமம்’ (ATPL-A) என்ற மிக உயரிய தகுதிச் சான்றிதழ் அவசியமாகும். ஆனால், அவர் அந்தத் தகுதியைப் பெறாமலேயே போலி உரிம ஆவணங்களைக் காட்டி நிறுவனத்தையும் ஒழுங்குமுறை அமைப்புகளையும் ஏமாற்றியுள்ளார்.
கடந்த 2009 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், போயிங் 767, 777 மற்றும் 787 போன்ற பிரம்மாண்ட பயணிகள் விமானங்களின் மூலமாக சுமார் 900 க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணங்களை இவர் கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள அதேவேளையில், தனது பணிக்காலத்தில் சுமார் 3 மில்லியன் கனேடிய டாலர்களைச் சம்பளமாகப் பெற்றுள்ளதும் விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு விமான நிலைய சோதனையின் போது இவரது ஆவணங்களில் உள்ள முரண்பாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுத் தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டது. இந்தச் சம்பவம் சர்வதேச விமான போக்குவரத்துத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள போதிலும், பயணிகளின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என ஏர் கனடா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
குறித்த நபர் வணிக ரீதியான அடிப்படை விமானி உரிமத்தைக் கொண்டிருந்தார் என்றும், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை நடத்தப்படும் அனைத்துத் தகுதித் தேர்வுகளிலும் அவர் தொடர்ந்து தேர்ச்சி பெற்று வந்ததாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனினும், விமானப் பாதுகாப்பு விதிகளைத் திட்டமிட்டு ஏமாற்றியுள்ள இவருக்கு எதிரான நீதிமன்ற வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

