கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்களும் முழுமையாக விசாரிக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரங்களுடன் தொடர்புடைய அனைத்து நபர்களும் தராதரமின்றி சட்டத்தின் முன் கொண்டுவரப்படுவார்கள் என்றும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இதற்கான முறையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (10) அமைச்சின் விசேட அறிவிப்பை விடுத்து உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விபரங்களை வெளியிட்டார்.
அவரது உரையின் போது, கடந்த காலத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையாகக் கருதப்பட்ட போதிலும் அது இதுவரை உறுதியாகவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். அத்தோடு, டொரிண்டன் பகுதியில் இடம்பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் ரஜு ஜயவீரவின் மரணம் குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல், ஊடகவியலாளர்கள் படுகொலை மற்றும் அரச நிதி முறைகேடுகள் எனப் பல முக்கிய சம்பவங்கள் குறித்துப் புதிய அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தி வருவதாகவும், அரசியல் நோக்கம் கொண்ட எந்தவொரு குழப்பங்களுக்கும் தமது தரப்பு அடிபணியாது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

