சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

india 16

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில் உள்ள செயற்கைக்கோள்கள், தகவல் தொடர்பு நெட்வொர்க்குகள் மற்றும் மின்சார விநியோகக் கட்டமைப்புகள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக விண்வெளியில் ஒரு தற்காலிகப் பாதுகாப்பு வளையத்தை அல்லது ‘விண்வெளி ஏர்பேக்’ (Space Airbag) அமைப்பை உருவாக்குவதற்கான புதிய திட்டமொன்றை விஞ்ஞானிகள் முன்மொழிந்துள்ளனர்.

‘ஸ்டோர்ம்வால்’ (StormWall) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அதிரடித் திட்டம் குறித்த ஆய்வு விபரங்கள் ‘ஸ்பேஸ் வெதர்’ (Space Weather) என்ற அறிவியல் இதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. பாஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து வடிவமைத்துள்ள இந்த விண்வெளிப் பாதுகாப்பு உத்தியின்படி, பூமியின் புவிவட்டப் பாதையில் (Geosynchronous Orbit) சுமார் 22,000 மைல்கள் உயரத்தில் ஆறு அதிநவீன விண்கலங்கள் அல்லது செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படும். இந்த விண்கலங்கள் தங்களுக்குள் பேரியம் (Barium), லித்தியம் (Lithium) அல்லது சோடியம் போன்ற காரத்தன்மை கொண்ட தனிமங்களை திரவ வடிவில் சேமித்து வைத்திருக்கும்.

சூரியனில் இருந்து ஆபத்தான சூரியப் புயல்கள் பூமியை நோக்கி வருவது கண்டறியப்பட்டவுடன், இந்த விண்கலங்கள் குறிப்பிட்ட வேதிப்பொருட்களை விண்வெளியில் வாயுவாக உமிழத் தொடங்கும். இவ்வாறு விண்வெளியில் தெளிக்கப்படும் வாயுக்கள் சூரியக் கதிர்வீச்சுகளின் காரணமாக மிக விரைவாக அயனியாக்கம் அடைந்து, மின்சாரம் பாய்ந்த ‘செயற்கை பிளாஸ்மா’ (Artificial Plasma) மேகங்களாக மாறும். இந்த பிளாஸ்மா அடுக்கு பூமியின் இயற்கையான காந்த மண்டலத்தின் (Magnetosphere) எல்லையை தற்காலிகமாகப் பலப்படுத்தி, சூரியப் புயல் மூலம் விண்வெளியில் இருந்து வரும் அதிகப்படியான ஆற்றலை பூமியைத் தாக்க விடாமல் திசை திருப்பி விண்வெளிக்குள்ளேயே சிதறடித்துவிடும் என கணினி உருவகப்படுத்துதல் (Computer Simulations) மூலம் விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் பூமியைத் தாக்கிய மிக மோசமான புவிக்காந்தப் புயலை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளில், இந்த ‘ஸ்டோர்ம்வால்’ தொழில்நுட்பம் விண்வெளிப் புயலின் தீவிரத்தை 50 சதவீதத்திற்கும் மேலாகக் குறைக்கக் கூடியது எனத் தெரியவந்துள்ளது. இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்குச் சுமார் 400 தொன் எடையுடைய வேதிப்பொருட்களை விண்வெளிக்குக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும் என்பதால் இதற்குப் பெருமளவிலான நிதி தேவைப்படும் எனக் கூறப்படும் அதேவேளையில், ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் போன்ற நவீன கனரக ராக்கெட்டுகள் மூலம் இதனைச் சாத்தியமாக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version