இந்தியா
இந்திய வீரர்களை வெளியேற்ற மாலைதீவு ஜனாதிபதி காலக்கெடு
இந்தியா தனது இராணுவ வீரர்களை மாலைத்தீவில் இருந்து விலக்கிக்கொள்ள அந்த நாட்டின் ஜனாதிபதி முகமது முய்ஸு காலக்கெடு விதித்துள்ளார்.
இதன்படி தனது நாட்டிலிருந்து இந்திய படையினர் 2024 மார்ச் 15க்கு முன்னர் வெளியேறவேண்டும் என்று முகமது முய்ஸு காலக்கெடு விதித்துள்ளார்.
சீனாவுக்கு தனது முதல் அரசு பயணத்தை மேற்கொண்டு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த காலக்கெடுவை மாலைதீவு ஜனாதிபதி விதித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி இந்தியா தனது இராணுவ வீரர்களை திரும்பப் பெறுமாறு ஜனாதிபதி முய்ஸ முறைப்படி கேட்டுக் கொண்டதாக மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுக் கொள்கை செயலாளரான அப்துல்லா நஜிம் இப்ராஹிம் கூறியுள்ளார்.
இந்திய இராணுவ வீரர்கள் மாலைத்தீவில் தங்க முடியாது. இது அரச தலைவர் முகமது முய்சுவின் கொள்கை மற்றும் இந்த நிர்வாகத்தின் கொள்கை என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக மாலைதீவும் இந்தியாவும் படைகளை திரும்பப் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உயர்மட்ட மையக் குழுவை அமைத்துள்ளன.
இந்த குழு தனது முதல் கூட்டத்தை இன்று காலை மாலேயில் உள்ள வெளியுறவு அமைச்சக தலைமையகத்தில் நடத்தியது.
இதனையடுத்தே இந்திய படையினரை விலக்கிக்கொள்ளும் காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளது.