உலகம்
சீனாவில் வேகமாக பரவும் சுவாச நோய்… முதியவர்கள், சிறார்களுக்கு பயணத்தடை விதித்த உலகின் முதல் நாடு
சீனாவில் வேகமாக பரவும் சுவாச நோய்… முதியவர்கள், சிறார்களுக்கு பயணத்தடை விதித்த உலகின் முதல் நாடு
சீனாவில் தற்போது சுவாச நோய் மிக வேகமாக பரவி வரும் நிலையில், முதியவர்கள் மற்றும் சிறார்கள் எவரும் அந்த நாட்டுக்கு பயணம் முன்னெடுக்க வேண்டாம் என தைவான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் பரவிவரும் தொற்று தொடர்பில் தரவுகளை பகிர்ந்துகொள்ள கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு கோரியிருந்தது. மேலும், கொரோனா பரவலுக்கு முன்பு ஏற்பட்ட நெருக்கடி தற்போது தென்படவில்லை எனவும்,
அசாதாரண அல்லது புதிய நோய்க்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையிலேயே தைவான் தமது குடிமக்களுக்கு பயணத்தடை விதித்துள்ளது.
மட்டுமின்றி, 2002- 2003 காலகட்டத்தில் சீனாவில் பரவிய சார்ஸ் வைரஸ் காரணமாக உலகளவில் 800 பேர் கொல்லப்பட்டனர். அந்த தொற்று பரவலையும் சீனா மூடி மறைக்கவே முயற்சிகள் முன்னெடுத்தது.
தற்போது வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, தைவானின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் சுவாச நோய்கள் அதிகரித்து வருவதால், வயதானவர்கள், சிறு குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், தேவையின்றி சீனா, ஹொங்ஹொங் மற்றும் மக்காவ் ஆகிய நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், பயணம் அவசியம் என்றால், மக்கள் சீனாவுக்குச் செல்வதற்கு முன் காய்ச்சல் மற்றும் கோவிட் தடுப்பூசிகளைப் பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், பயணத்தடை விதிப்பதால் மட்டும் சுவாச நோய் பரவுவதை தடுக்க முடியாது என நிபுணர்கள் தரப்பு வாதிட்டுள்ளனர். மேலும், சீனாவில் தற்போது பரவும் சுவாச நோயானது பொதுவாக அனைத்து நாடுகளிலும் காணப்படுவது தான் என சீனா பதிலளித்துள்ளது.