இந்தியாவின் கரிசனையை மீறிய இலங்கை அரசு : ஷி யான் 6க்கு ஆராய்ச்சிகளில் ஈடுபட மறுப்பு!
சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6க்கு இந்தியப் பெருங்கடலின் அடிப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை என இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விஞ்ஞானி கே. அருளானந்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளுக்கு மத்தியில் சீனாவின் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.
இதையடுத்து இந்தியாவினால் உளவுக் கப்பல் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஷி யான் 6 கொழும்புத்துறைமுகத்தை நேற்றைய தினம் சென்றடைந்துள்ளது.
இன்று ஆராய்ச்சியை தொடங்கிய நிலையில் கடலுக்கு அடியில் ஆராய்ச்சி செய்ய அனுமதி வழங்கவில்லை என விஞ்ஞானி கே. அருளானந்தன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கடலின் வெப்பநிலை மாற்றம், காலநிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து நீர் தூண்கள் பற்றிய ஆய்வுகளை மேற்க்கொள்ள இந்த கப்பல் இலங்கை வந்தடைந்துள்ளது.
இந்த ஆய்வின் வாயிலாக எதிர்கால வறட்சி மற்றும் மழைக்காலங்களை குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்பே கணிக்க முடியும் என அருளானந்தன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வது விவசாயத்திற்கு பாரிய உதவியாகவிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உலகிலேயே மிகக் குறைந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் கடல் பரப்பாக இந்தியப் பெருங்கடல் திகழ்வதாகவும் தற்போது சீனாவுடன் இணைந்து இலங்கை கூட்டு ஆராய்ச்சி நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் விஞ்ஞானிகள் கப்பலில் இருப்பார்கள் எனவும் குறித்த ஆராய்ச்சி நடவடிக்கைகளின் மூலம் சேகரிக்கப்படும் தரவுகளை எவரும் வெளியே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படாதெனவும் அருளானந்தன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடலின் அடிப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை இதன்படி, கடலுக்கு அடியில் எந்த ஒரு ஆராய்ச்சி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது எனவும் அவர் உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.