ஹமாஸிடமிருந்து நூற்றுக்கணக்கான பிணைக்கைதிகள் மீட்பு
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் எலைட் பிரிவு வீரர்கள் அதிரடியாக 60 ஹமாஸ் அமைப்பினரை கொன்று, 250 பிணைக்கைதிகளை மீட்ட காணொளி வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியான பதிவுகளும், காணொளியும் பகிரப்பட்டுள்ளது.
அதில், 60 ஹமாஸ் அமைப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும், ஹமாஸ் அமைப்பின் தெற்கு மண்டல தளபதி முகம்மது அபு உள்பட 26 பேரை கைது செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிணைக்கைதிகளை கடத்தி வைத்திருக்கும் பகுதிக்குள் பாதுகாப்புப் படை வீரர்கள் ஒவ்வொரு அடியாக அடுத்தடுத்து நுழைந்து, ஹமாஸ் அமைப்பினரை எதிர்த்து சண்டையிடும் காட்சிகளும் அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் ஹமாஸ் அமைப்பினரை கொன்று, பிணைக்கைதிகளை மீட்பதற்காக இந்தச் சண்டை நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஹமாஸ் ஆயுதக் குழுவினரை அழிக்கும் வகையில் காஸா மீது தரைவழித் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இந்த காணொளி வெளியாகியிருக்கிறது.
இதேவேளை காஸாவின் ஒரே மின் நிலையமும் எரிபொருள் பற்றாக்குறையினால் மூடப்பட்டிருப்பதால் காஸா பகுதி இருளில் மூழ்கியுள்ளது.
இருப்பினும் தனியாா் ஜெனரேட்டா்கள் மூலம் சில இடங்களில் மட்டுமே மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சா்வதேச செஞ்சிலுவை சங்கத்தைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவர், காஸாவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், புதிதாகப் பிறந்த குழந்தைகளை இன்குபேட்டரில் வைப்பதிலும், வயது முதிா்ந்த நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் செலுத்துவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்வதும், எக்ஸ்ரே எடுப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.