உலகம்
எதிர்க்கட்சியினரை கொலை செய்த பெலாரஸ் நாட்டு கூலிப்படை உறுப்பினர்
எதிர்க்கட்சியினரை கொலை செய்த பெலாரஸ் நாட்டு கூலிப்படை உறுப்பினர்
பெலாரஸ் ஜனாதிபதியின் கூலிப்படையில் உறுப்பினராக இருந்த ஒருவர் மீது சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், அவரை சுவிஸ் நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது.
சில நாடுகளில், ஆட்சியாளரை எதிர்த்துக் கேள்வி கேட்டால் கொலை செய்யும் பயங்கரம் இன்றும் காணப்படுகிறது. அவ்வகையில், பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதியான Alexander Lukashenkoவின் கூலிப்படையினராகிய ஒருவர் மீது சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது.
1999ஆம் ஆண்டு, பெலாரஸ் நாட்டின் எதிர்க்கட்சியினர் மூன்று பேரை கடத்தி கொலை செய்த விவகாரத்தில் பங்கிருப்பதாக Yuri மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை Yuri ஒப்புக்கொண்டிருந்தார். தன் நாட்டிலிருந்து தப்பி வெளியேறிய பின் சுவிட்சர்லாந்தின் St.Gallen மாகாணத்தில் 2018ஆம் ஆண்டு முதல் வாழ்ந்துவருகிறார் அவர். அவர் சுவிட்சர்லாந்தில் வாழ்வதாலேயே, அவர் மீது சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.
தான் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பேச ஒப்புக்கொண்டதையடுத்து பெலாரஸில் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறி, சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியிருந்தார் Yuri.
Yuriக்கு, ஒன்று முதல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக சுவிஸ் நீதிமன்றம் அவரை விடுவித்துவிட்டது.
மூன்று அரசியல்வாதிகள் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் தனக்கு தொடர்பு இருந்தாலும், கொலையாளி தான் அல்ல என்று கூறியிருந்தார் Yuri.
இந்நிலையில், Yuriயின் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருப்பதாகக் கூறி அவரை விடுவித்துவிட்டார் வழக்கை விசாரித்துவந்த சுவிஸ் நீதிபதி.
இந்த தீர்ப்பு, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தையளித்துள்ளதாக, கொல்லப்பட்டவர்களின் பிள்ளைகள் தெரிவித்துள்ளார்கள்.