உலகம்
தக்காளியை பாதுகாக்க ரூ.22 ஆயிரம் செலவில் சிசிடிவி கேமரா
தக்காளியை பாதுகாக்க ரூ.22 ஆயிரம் செலவில் சிசிடிவி கேமரா
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் தக்காளியை பாதுகாக்க விவசாயி ஒருவர் ரூ.22 ஆயிரம் செலவு செய்து சிசிடிவி கேமரா வைத்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
நாடு முழுவதும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பாமர மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தக்காளியா, தங்கமா என்று கேட்கக் கூடிய அளவுக்கு வந்துவிட்டது என்றும் சிலர் கூறுகின்றனர். சில திருமணங்களில் பரிசாக தக்காளியை கொடுக்கும் பழக்கமும் வந்துள்ளது.
உத்திர பிரதேசத்தில் காய்கறிக்கடை வியாபாரி ஒருவர் தக்காளியின் பாதுகாப்பிற்காக பவுன்சர்களை நியமித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், ஹோட்டல்களிலும் தக்காளி இல்லாமல் சமைத்து வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஷரத் ராவத்தே என்ற விவசாயி ஒருவர் தக்காளி பாதுகாப்பிற்காக தனது வயலில் கேமராக்கள் பொருத்துவதற்கு ரூ.22 ஆயிரம் செலவிட்டுள்ளார்.
இவர், நாடு முழுவதும் தக்காளியின் விலை உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டும், திருட்டு அல்லது வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்களுக்கு பயந்து தனது வயலில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார்.
மேலும், அவர் காலத்தின் தேவைக்காகவும் சிசிடிவிகளை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு தோராயமாக 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளியின் விலை உயர்வால் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அந்தவகையில், கர்நாடகாவின் கோலாரில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு சுமார் 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளியைக் கொண்டு சென்ற லாரி காணாமல் போயுள்ளது.
மேலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காய்கறி சந்தையில் உள்ள கடைகளில் இருந்து சுமார் 40 கிலோ தக்காளியை திருடர்கள் திருடிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login