உலகம்
கனடா எல்லை அருகே வனப்பகுதியில் பிள்ளை பெற்றெடுத்த பெண்: வெளிவரும் தகவல்
கனடா எல்லை அருகே வனப்பகுதியில் பிள்ளை பெற்றெடுத்த பெண்: வெளிவரும் தகவல்
அமெரிக்க எல்லை அருகே, கியூபெக் வனப்பகுதியில் பெண் ஒருவர் இரவு பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் பொலிசாரால் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிறைமாத கர்ப்பிணி சட்டவிரோதமாக எல்லை கடந்து அமெரிக்கா செல்லவிருந்த நிலையிலேயே அவர் பிள்ளை பெற்றெடுத்திருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு நம்புகின்றனர்.
கியூபெக் பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், அமெரிக்க எல்லை ரோந்துப்படை அதிகாரிகள் இந்த தகவலை தங்களுக்கு தெரியப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் 911 இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அதில் பெண் ஒருவர் மகப்பேறு நேரம் நெருங்கிய நிலையில் காணப்படுவதாக தெரியப்படுத்தியுள்ளனர்.
குறித்த தாயார் ஆண் ஒருவருடனும், இளம்வயது சிறார் ஒருவருடனும் காணப்பட்டதாக கியூபெக் பொலிசார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு பின்னரே, இந்த மூவரின் உறவுமுறை உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
911 இலக்கத்திற்கு தொடர்புகொண்ட நிலையில், அவர் இருக்கும் இடத்தை உடனடியாக பொலிசார் உறுதி செய்துள்ளனர். சம்பவயிடத்திற்கு பொலிசார் மற்றும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் செல்லும் போதே, அந்த பெண் பிள்ளை பெற்றெடுத்துள்ளார் எனவும், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக கியூபெக் மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த நாட்டினர் என்பது உறுதி செய்யப்படும் எனவும், ஆனால் அவர்கள் கனடாவில் சட்டப்பூர்வமாகவே நுழைந்தவர்கள் என்பதுடன், எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை என உறுதி செய்துள்ளனர்.
கனடா மண்ணில் அந்த தாயாருக்கு பிள்ளை பிறந்துள்ளதால், அந்த குழந்தை தற்போது கனேடிய குடிமகன் அந்தஸ்தை பெறுகிறார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login