வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக ட்ரோன்களை தயாரிக்க தென்கொரிய அதிபர் யூன்-சுக்-இயோல் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், ட்ரோன்களை உருவாக்குவதற்கான உத்தரவில் தென்கொரிய அதிபர் யூன்-சுக்-இயோல் நேற்று (27) கையெழுத்திட்டார்.
அதன்படி ட்ரோன்கள் தயாரிக்கும் பணி வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் எனவும், சுமார் 10 ட்ரோன்கள் வரை வடகொரியா மீது செலுத்தப்படும் எனவும் கருதப்படுகிறது.
பின்னணி
தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மீது தொடர் ஏவுகணை சோதனை, ட்ரோன் தாக்குதல் போன்றவற்றை வடகொரியா நடத்தி வருகின்ற நிலையில், கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலைமையை கருத்திற்கொண்டு, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து முத்தரப்பு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டன.
இதற்கு வடகொரியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதனை பொருட்படுத்தாமல், தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டதால் கடந்த ஆண்டு இறுதியில் தென்கொரியாவின் கங்வாடோ தீவு மற்றும் தலைநகர் சியோல் ஆகிய பகுதியில் வடகொரியா 5 டிரோன் தாக்குதலை நடத்தியது.
இதனை தென்கொரிய இராணுவத்தினர் தடுத்து நிறுத்திய போதிலும், இந்த சம்பவம் அங்கு போர்ப் பதற்றத்தை அதிகரித்தது.
இதனையடுத்து, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக ட்ரோன்களை உருவாக்க தென்கொரியா முடிவு செய்துள்ளதோடு, இதற்கான கொள்கை கடந்த மாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மைல்கல்
இது தொடர்பாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி,
“ட்ரோன்களை பயன்படுத்துவதன் மூலம் போர்க்களத்தில் முறையாகவும், திறமையாகவும் செயல்பட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வடகொரியாவின் போர் நடவடிக்கைகளை கண்காணிக்க இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்” என கூறப்பட்டு உள்ளது.
Leave a comment