உலகம்
கடும் உணவு பஞ்சம்- வடகொரியாவில் அதிபர் அவசர ஆலோசனை


வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே எல்லை பிரசனை தொடர்பாக மோதல் இருந்து வருகிறது.
தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளதால் ஆத்திரம் அடைந்த வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி உள்ளது.
உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் வடகொரியாவில் தற்போது கடும் உணவு பஞ்சம் நிலவி வருவதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. சிலர் பசி, பட்டினியால் இறந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால் இதனை அந்த நாட்டு அரசு மறுத்து உள்ளது. சீனாவில் கொரோனா தொற்று காரணமாக அங்கிருந்து வடகொரியாவுக்கு அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,உணவு உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
வடகொரியா அணு ஆயுதத்திற்கு அதிகம் செலவிட்டு வருவதாவும் பாலிஸ்டிக் உள்ளிட்ட ஏவுகணை சோதனைகளால் சர்வதேச அளவில் பொருளாதார தடை விதிக்கப்பட்டு உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து உணவு பற்றாக்குறையை போக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழுவை கூட்டினார். இதில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும், விவசாய முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கபட்டது. விவசாயம் குறித்து விவாதிக்க மட்டுமே கட்சியின் கூட்டம் கூட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இதில் பேசிய அதிபர் கிம் ஜாங் நாட்டில் உணவு உற்பத்தி இலக்கை அடைவதே முதன்மையானது என்றும் மார்க்கெட்டில் உணவு பொருட்கள் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் கூறினார்.
You must be logged in to post a comment Login