இந்தியா
சான்பிரான்சிஸ்கோவில் தொங்கு பாலத்தில் இருந்து குதித்து இந்திய சிறுவன் உயிர் மாய்ப்பு!


அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் கோல்டன் கேட் என்ற பிரசித்தி பெற்ற தொங்கு பாலம் உள்ளது. அந்த நகரத்தின் அடையாள சின்னமாக திகழும் இந்த தொங்குபாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பாலம் திறக்கப்பட்ட 1937ம் ஆண்டில் இருந்து இதுவரை 2 ஆயிரம் பேர் வரை தங்கள் உயிரை மாய்த்து உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 25 பேர் வரை உயிர் இழந்து உள்ளனர். இந்த நிலையில் 16 வயதான அமெரிக்காவை சேர்ந்த இந்திய சிறுவன் நேற்று இந்த தொங்கு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது சைக்கிள் மற்றும் செல்போன், கைப்பை ஆகியவை பாலத்தில் அனாதையாக கிடந்தது. இதையடுத்து கடலோர படையினர் அவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
இது பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மகன் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். சிறுவன் ஏன் இந்த முடிவை தேடி கொண்டார் என தெரியவில்லை. அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.