ஆயுதக் கொள்வனவுக்கு எதற்காக வடகொரியா தேர்வு செய்யப்பட்டது? – பஸிலை நோக்கி பாயும் கேள்விக்கணைகள்!

76029f91 439d3e2f f1636930 basil

” போர்காலத்தில் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதற்கு சீனா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் முன்வந்திருந்த நிலையில், எதற்காக வடகொரியா தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்தும், ஆயுதக் கொள்வனவுக்காக ஏன் கறுப்பு பணம் பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பிலும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜீர அபேவர்தன வலியுறுத்தினார்.

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” போர் காலத்தில் ஆயுதம் கொள்வனவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பானது தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச தளத்திலும் தாக்கத்தை செலுத்தக்கூடிய விடயமாக அமைந்துள்ளது.

போரின்போது கறுப்பு பணத்தை பயன்படுத்தி வடகொரியாவில் இருந்து ஆயுதம் கொள்வனவு செய்யப்பட்டது என நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய நிதி நிலைமை குறித்து சர்வதேசத்துக்கு நம்பிக்கை இல்லாத நிலையில், நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பானது, சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, எம்மால் எழுப்படும் 4 கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் அவர் உரிய விளக்கத்தை விரைவில் வழங்க வேண்டும்.

1. ஆயுதக் கொள்வனவுக்கு எதற்காக கறுப்புப் பணம் பயன்படுத்தப்பட்டது?

2. போர் நடவடிக்கைக்கு நிதி தேவையெனில் நாடாளுமன்றம் ஊடாக பெற்றிருக்கலாம். எனவே, நிதி பெறப்பட்ட வழிமுறைகள் மற்றும் இடங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தல் அவசியம்.

3. சீனா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆயுதம் வழங்குவதற்கான ஒத்துழைப்பை வழங்கிவந்த நிலையில், எதற்காக வடகொரியா தேர்வு செய்யப்பட்டது?

4. வடகொரியாவில் இருந்து வாங்கப்பட்ட ஆயுதங்கள் எவை? அவை உரியவகையில் தரவுக் கட்டமைப்பில் பதிவுசெய்யப்பட்டனவா?

#SriLankaNews

Exit mobile version