நட்டஈட்டு தொகையை என்ன செய்தீர்கள்?- ஐ.ம.ச கேள்வி
தீப்பிடித்து எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனத்திடம் இருந்து இதுவரை பெற்றுக்கொண்ட நட்டஈட்டு தொகை தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்க பல நாடகங்களை இன்று அரங்கேற்றி வருகிறது. அண்மையில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்தபோது அந்த நிறுவனத்திடமிருந்து மிகப்பெரிய நட்டஈடு கிடைக்கவுள்ளது என அமைச்சர்கள் தெரிவித்தார்கள்.
எனவே, இதுவரை கிடைத்த நட்டஈடு எங்கே என நாங்கள் கேட்கின்றோம். நட்டஈட்டை பெற்றுக்கொள்ள இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? இந்தக் கப்பல் சம்பவம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் அர்த்தமான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை.
இரத்தினபுரி பிரதேசத்தில் மிகப்பெரிய மாணிக்கக் கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது என சொல்லப்பட்டது. ஆனால் இறுதியில் அந்தக் கல் எங்கே என்று தெரியவில்லை. இதுபோல பல பிரச்சினைகளை முன்வைத்து மக்களின்பிரச்சினைகளை மூடிமறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.
பங்களாதேஸிடமிருந்து மிகப்பெரிய அளவு டொலரை அரசாங்கம் பெற்றுள்ளது. ஆனால் இது கடன் அல்ல என்று சொல்லப்பட்டாலும் அரசாங்கம் அதற்கான வட்டியை செலுத்தவுள்ளது. அது கடன் இல்லையென்றால் ஏன் வட்டியை செலுத்த வேண்டும் என்பதையும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Leave a comment