இலங்கையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னராக காணப்பட்ட கொவிட் அச்சுறுத்தல் நிலைமை தற்போது குறைவடைந்திருந்தாலும், தற்போதைய நிலைமையை சரியாக முகாமைத்துவம் செய்யாது விட்டால் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் காணப்பட்டதனை விட அதிக அபாய நிலைமை ஏற்படக் கூடும்.
இவ்வாறு சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பதில் பணிப்பாளர் விசேட வைத்தியர் சமித்த கினிகே எச்சரித்துள்ளார்.
நேற்றையதினம் (29) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் .
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 53 சதவீதமானோர் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டு பாதுகாப்புப்பெற்றுள்ளனர்,
63.6 சதவீதமானோர் முதற்கட்ட தடுப்பூசியினைப் பெற்றுள்ளனர் , ஆனால் இது மாத்திரம் போதுமானதல்ல.
மீண்டும் ஒரு அபாயமான சூழ்நிலை ஏற்படாது இருக்க அடிப்படைச் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது தனிநபர் உரிமை என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் இதில் சமூக உரிமையும் பொறுப்பும் உள்ளடங்கியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எந்தவொரு நாடும் எந்தவொரு தடுப்பூசியையும் தடை செய்யவில்லை. மாறாக குறித்த தடுப்பூசிகளினைப் பெற்று தமது நாட்டுக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் காலத்தில் சில சலுகைகளினை வழங்குகின்றன.
எனவே எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு தயங்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.
முன்னர் ஏற்பட்டதனைப் போன்ற அபாய நிலை மீண்டும் ஏற்படுமாக இருந்தால் அதனைக் கட்டுப்படுத்துவது இலகுவானதல்ல என மேலும் தெரிவித்துள்ளார்.