வவுனியா பல்கலையில், தமிழ் மொழியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கல்வெட்டு அவசர அவசரமாக இடம்மாற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகமாக இருந்த வவுனியா வளாகம் கடந்த 01.08.2021 அன்று தனி பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது.
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு நாளை விஜயம் செய்யும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அதனை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார். அதனால் பாதுகாப்பிற்காக பொலிஸார். இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பல்கலைகழகத்திற்கு நுழைவாயில் ஊடாக உட்சென்று பல்வேறு பீடங்களுக்கும் பிரிந்து செல்லும் பிரதான பகுதியில் முக்கோண வடிவில் பல்கலைக்கழகத்தின் பெயருடன் கூடிய கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
வீதியில் இருந்து உட்செல்லும் போது காட்சிக்கு புலப்படும் வகையில் தமிழ்மொழியும், மற்றைய இரு பங்கங்களில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு வீதியில் இருந்து பல்கலைக்கழகத்திற்குள் செல்லும் போது பீடங்களுக்கு பிரிந்து செல்லும் பிரதான பகுதியில் தமிழ்மொழியில் காட்சி கொடுத்த கல்வெட்டு அவசர அவசரமாக விசேட அதிரடிப்படையினரால் அகற்றப்பட்டு மறுபக்கம் மாற்றப்பட்டுள்ளதுடன், முன் பகுதியில் சிங்கள மொழி கல்வெட்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
#SriLankaNews