யாழ்ப்பாணம், வடமராட்சி திக்கம் பகுதியில் பயணப் பொதி (Suitcase) ஒன்றில் கேரளா கஞ்சாவைக் கடத்திச் சென்ற இரு இளைஞர்கள், காவல்துறையினரைக் கண்டதும் வாகனத்தையும் கஞ்சாவையும் கைவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
வடமராட்சி திக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தப்படுவதாகப் பருத்தித்துறை காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்துத் திடீர்ச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளைக் காவல்துறையினர் மறித்தபோது, அதில் பயணித்த இரு இளைஞர்களும் காவல்துறையினரிடம் பிடிபடாமல் இருக்கத் தமது மோட்டார் சைக்கிளையும், கொண்டு வந்த பயணப் பொதியையும் அங்கேயே போட்டுவிட்டுத் தப்பியோடினர்.
காவல்துறையினர் அந்தப் பயணப் பொதியைச் சோதனையிட்டபோது துணிகளுக்கு அடியில் சூட்சுமமாகப் பொதி செய்யப்பட்ட நிலையில் 12 கிலோ கேரளா கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பருத்தித்துறை காவல்துறை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. தப்பியோடிய இரு சந்தேக நபர்களையும் அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை வடமராட்சி காவல்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.