முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று முதல் காணாமல் போயிருந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவர், இன்று (26) பிற்பகல் ஒரு தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் நேற்றிரவு (25) முதல் காணப்படாமல் இருந்துள்ளார். இது குறித்து அவரது பெற்றோர்கள் இன்று காலை புதுக்குடியிருப்பு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
பெற்றோரின் முறைப்பாட்டுக்கு அமைய, காவல்துறையினர் மற்றும் உறவினர்கள் மேற்கொண்ட தீவிர தேடுதலின் போதே, அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டக் கிணற்றில் இளைஞனின் உடல் கண்டறியப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இளைஞனின் உயிரிழப்பு விபத்தா? தற்கொலையா? அல்லது கொலையா? என்பதற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.