மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நாளை (நவம்பர் 21) நண்பகல் நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் காரணமாக, அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அதற்கமைய, பிற்பகல் 02.00 மணி முதல் கூட்டம் நிறைவடையும் வரை நுகேகொடை மேம்பாலத்திற்கு அருகிலுள்ள ஹைலெவல் சந்தியிலிருந்து நாவல வீதியின் நாவல சுற்றுவட்டம் வரையான பகுதியில் (ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கிற்கு முன்னால் உள்ள வீதி) வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில் பின்வரும் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.
பயன்படுத்தக்கூடிய மாற்று வீதிகள்:
கொழும்பு திசையிலிருந்து மற்றும் கொஹுவளை திசையிலிருந்து நுகேகொடை நகர் ஊடாக நாவல மற்றும் பிட்டகோட்டே திசைகளுக்குச் செல்லும் வாகனங்கள், ஹைலெவல் வீதியின் கம்சபா சந்தியில் இடதுபுறமாகத் திரும்பி கட்டிய சந்தி ஊடாக மிரிஹான மற்றும் நாவல திசைகளுக்கு பயணிக்க முடியும்.
பிட்டகோட்டே திசையிலிருந்து மற்றும் நாவல திசையிலிருந்து நுகேகொடை நகர் ஊடாக ஹைலெவல் வீதிக்குச் செல்லும் வாகனங்கள், நாவல சுற்றுவட்டத்திலிருந்து கட்டிய சந்தி ஊடாக கம்சபா சந்தி மற்றும் தெல்கந்த சந்தியூடாக ஹைலெவல் வீதிக்கு பயணிக்க முடியும்.
மஹரகம திசையிலிருந்து ஹைலெவல் வீதி ஊடாக நுகேகொடை நகர் நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள், கம்சபா சந்தியில் வலதுபுறமாகத் திரும்பி கட்டிய சந்தி ஊடாக பயணிக்க முடியும்.