நாட்டின் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தின் எதிர்காலமும். நாட்டின் எதிர்காலமும் ஆபத்தில் சிக்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) கட்டளை நியதிகள் சட்டம் 27 (2) கீழ் கேள்விப் பத்திரங்களை அரசாங்கத்திடம் முன்வைத்தார், இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் தற்போதைய அரசாங்கமானது கல்வியில் உள்ள பிரச்சினைகளை முகாமைத்துவம் செய்வதில் ஈடுபாடு இல்லாமல் செயற்பட்டு வருகிறது.,
ஒரு நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சி கிட்டத்தட்ட அதன் கல்வியின் தரத்தைப் பொறுத்தே அமைந்துள்ளது.
இருப்பினும், கடந்த காலத்தில் செயல்பட்டு வந்த இணையவழி முறையின் மூலம் ஒவ்வொரு குழந்தையும் சமமான கல்வியைப் பெற்றிருக்கும் என்பதில் திருப்திகரமான நிலை இல்லை.
உலகெங்கிலும் உள்ள பிற நாடுகள் கொவிட் நிலைமையை நிர்வகித்தவண்ணம். கல்வி புத்துயிர் பெறுவதற்கும் முன்னுரிமை அளித்துள்ளன.
எனினும், பூரணமாக வழங்கப்படாத க.பொ.த சாதாரண தர முடிவுகள், ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்காக இந்த நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் பெற்றோர்களும் காலவரையின்றி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது – என்றார்.