“அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு சூழ்ச்சி செய்யாமல், வெளியேறுங்கள். கதவு திறந்தே உள்ளது.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்பு கூறவேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாகவும் இருவரும் பொறுப்பு கூறவேண்டும். மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கான பொறுப்பையும் இவர்கள் ஏற்க வேண்டும்.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் அரசாங்கத்தை பாதுகாக்க போராடுபவர்கள். அவர்களால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை. ஆனால் சிலர் உள்ளே இருந்துகொண்டு காலைவாரப் பார்க்கின்றனர். அத்தகையவர்கள் வெளியேறலாம். பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிடுவதுபோல சலூன் கதவு திறந்தே உள்ளது.”- என்றார்.