T20 உலக கோப்பை போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ளது
இந்த போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடக்கவிருக்கின்றன.
நாளைமுதல் வரும் நவம்பர் 14 வரை இப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன.
ஆனால் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக ‘சூப்பர் 12’ சுற்றில் விளையாட இருக்கின்றன.
இலங்கை, வங்காள தேசம் உள்ளிட்ட 8 நாடுகள் தகுதி சுற்றில் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
‘A ’பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும், ‘B ’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூகினியா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை விளையாட வேண்டும்.
இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும்.
அதன் படி நாளை 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது.
B பிரிவில் உள்ள ஓமன் -பப்புவா நியூகினியா (மாலை 3.30), வங்காளதேசம்- ஸ்காட்லாந்து (இரவு 7.30) அணிகள் மோதுகின்றன.
18-ந் திகதி நடைபெறும் ஆட்டங்களில் அயர்லாந்து- நெதர்லாந்து, இலங்கை- நமீபியா மோதுகின்றன.
வருகிற 22-ந் திகதியுடன் தகுதி சுற்றான முதல் சுற்று முடிகிறது. 2-வது சுற்றான சூப்பர் 12 சுற்று வருகிற 23-ந் திகதி தொடங்குகிறது.
சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி குரூப்-2ல் இடம்பெற்று உள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
தகுதி சுற்றில் இருந்து 2 அணிகள் (B 1, A 2) அந்த பிரிவில் இடம்பெறும்.
குரூப் 1ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் 2 தகுதி சுற்று அணிகள் (A1, (B 2) ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எதிர் கொள்கிறது.
இந்த ஆட்டம் துபாயில் இலங்கை நேரபடி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இந்த ஆட்டம் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 8-ந் திகதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் 2 பிரிவில் இருந்தும், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும். 10 மற்றும் 11-ந் திகதிகளில் அரை இறுதி ஆட்டங்கள் அபுதாபி மற்றும் துபாயில் நடக்கிறது.
இறுதிப்போட்டி நவம்பர் 14-ந் திகதி துபாயில் நடக்கிறது. மொத்தம் 45 ஆட்டங்கள் ஓமனில் உள்ள மஸ்கட் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது.
இந்த முறை யார் வெல்வார்கள் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பாக உள்ளது.
Leave a comment