நட்சத்திர டென்னிஸ் வீரர் நொவாக் ஜொகோவிச்சின் அவுஸ்திரேலிய விசா இரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அவரை உடனடியாக அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில், கலந்துகொள்வதற்காக சேர்பிய வீரரான ஜொகோவிச் அவுஸ்திரேலியா- மெல்போர்ன் சென்றிருந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில நீதிமன்றம் ஜொகோவிச்சின் விசாவை இரத்து செய்துள்ளது.
ஏனெனில், நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜொகோவிச் கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளவில்லை எனத் தெரிவித்து இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறையிலிருந்து தமக்கு மருத்துவ விலக்கு அளிக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் ஜொகோவிச் கோரியிருந்தார். இருப்பினும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவுஸ்திரேலியாவில் அனைவருக்கும் ஒரே விதமான சட்டம் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுமென பிரதமர் ஸ்கொட் மொரிசன் அறிவித்தமையின் அடிப்படையில் அவரது விசா இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், நாட்டைவிட்டு வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், தமது மகனை அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஐந்து மணித்தியாலங்கள் அறையில் தடுத்து வைத்திருப்பதாக ஜோகோவிச்சின் தந்தை குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டால் சேர்பிய மக்கள் போராட்டம் நடத்துவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நட்சத்திர டென்னிஸ் வீரர் நொவாக் ஜொகோவிச்சின் கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டாரா இல்லையா என்பது பற்றிய விபரங்களை அவர் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#SportsNews
Leave a comment