பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு இலங்கையின் உரிய அதிகாரசபைகளிடம் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா வலியுறுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தலைவர்கள் மற்றும் பொது அதிகாரிகளின் இரகசிய நிதி நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக மீண்டும் உலகிற்கு வெளிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை உட்பட வெளிநாடுகளில் ஊழல் எவ்வாறு கடல் கடந்த நிறுவனங்களினால் ஊக்குவிக்கப்படுகின்றது மற்றும் இறுதி நன்மை பெறும் உரிமையாளர்களின் பதிவேடுகளை வெளிப்படையாக பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் இவ்விடயங்கள் தெளிவாக வலியுறுத்தும் ஆதாரங்களாக அமைந்துள்ளன.
முன்னாள் நீர்ப்பாசன வடிகாலமைப்பு பிரதி அமைச்சர் மற்றும் அவரது கணவர் ஆகியோரின் கடல் கடந்த பாரியளவான சொத்துக்களை இந்த ஆவணம் குறிப்பிடுகிறது.
பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு இலங்கையின் உரிய அதிகாரசபைகளிடம் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா கேட்டுக்கொள்கிறது.
சட்ட அமுலாக்க அதிகாரசபைகளுக்கும் நீதித்துறைக்கும் எந்தவொரு தலையீடுகளும் இன்றி சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பான நிலுவையிலுள்ள விசாரணைகளை முன்னெடுப்பதும் முடிவுகளை மேற்கொள்ளவதும் இன்றியமையாததாகும்.
பண்டோரா பேப்பர்களில் அடையாளம் காணப்பட்ட சொத்துக்கள் இலங்கையில் பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்தி பெறப்பட்டதா என்பதை அறிய ஓர் விரிவான விசாரணையை உள்நாட்டில் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என ட்ரான்ஸ் பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா மீண்டும் வலியுறுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
Leave a comment