வாட்ஸ்அப் காணொளி அழைப்பு மோசடி: இலங்கையர்களுக்கு கணினி அவசரகால ஆயத்தக் குழு எச்சரிக்கை!

world 7

இலங்கையர்களை இலக்கு வைத்து வாட்ஸ்அப் (WhatsApp) தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் புதிய வகை காணொளி அழைப்பு மோசடி குறித்து, இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழுவிற்கு (CERT) அண்மைய நாட்களில் அதிகளவிலான புகார்கள் கிடைத்துள்ளன. இந்தியாவுடன் தொடர்புடைய கும்பல்களால் இந்த மோசடிகள் முன்னெடுக்கப்படுவதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த மோசடிக்காரர்கள் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான பெண்களின் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம் நபர்களை அணுகுகின்றனர். பின்னர் அவர்களின் வாட்ஸ்அப் எண்களைப் பெற்று, நள்ளிரவு அல்லது தனிமையில் இருக்கும் நேரங்களில் காணொளி அழைப்புகளை மேற்கொள்கின்றனர். அந்த அழைப்பை ஏற்கும் நபர்களிடம் ஆபாசமான முறையில் நடந்துகொள்ளுமாறு தூண்டுகின்றனர். பாதிக்கப்பட்டவர் அதில் பங்கேற்காவிட்டாலும் கூட, அந்த அழைப்பில் சில விநாடிகள் இருந்தாலே போதும், அதனைப் பயன்படுத்தித் திரிக்கப்பட்ட ஆபாசக் காணொளிகளை உருவாக்கி மோசடிக்காரர்கள் மிரட்டத் தொடங்குகின்றனர்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட போலி காணொளிகளைப் பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவதாகக் கூறி, பெரும் தொகையைப் பணயத் தொகையாகக் கோருகின்றனர். பெரும்பாலும் இந்தியாவிலுள்ள வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்புமாறு அவர்கள் வற்புறுத்துகின்றனர். சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் இளைஞர்கள் எனப் பல தரப்பினரும் இந்த மோச வலையில் விழுந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, இணையத்தில் அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் காணொளி அழைப்புகளைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான மிரட்டல்களுக்குப் பயந்து பணத்தை வழங்க வேண்டாம் எனவும், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழுவிடமோ (CERT) முறைப்பாடு செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுடன் இருப்பதே இவ்வாறான மோசடிகளில் இருந்து தப்பிக்கச் சிறந்த வழியாகும்.

Exit mobile version