ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), தனது கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்திப் பகுதிகளின் புதிய வரைபடத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஈரானிய அரை-அதிகாரப்பூர்வ ஊடகமான ‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த புதிய வரைபடம், பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வரைபடத்தின்படி, கட்டுப்பாட்டுப் பகுதியானது மேற்கில் ஈரானின் கெஷ்ம் (Qeshm) தீவின் மேற்கு முனைக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தின் உம் அல்-குவைன் (Umm al-Quwain) அமீரகத்திற்கும் இடையிலான ஒரு நேர்க்கோட்டுடன் தொடங்குகிறது. கிழக்கில், இப்பகுதியானது ஈரானின் மொபாரக் மலைக்கும் (Mubarak Mount) ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா (Fujairah) அமீரகத்திற்கும் இடையிலான எல்லைக்கோட்டில் முடிவடைகிறது. இதன் மூலம் ஜலசந்தியின் முக்கிய நுழைவாயில் பகுதிகளை ஈரான் தனது நேரடிப் பார்வையின் கீழ் கொண்டு வந்துள்ளது.
ஈரான் உரிமை கோரியுள்ள இந்தக் கட்டுப்பாட்டுப் பகுதி, முந்தைய எல்லைகளிலிருந்து எந்த அளவிற்கு மாற்றப்பட்டுள்ளது என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், சர்வதேசக் கடல் வழிப்பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் இவ்வாறு தன்னிச்சையாக வரைபடங்களை வெளியிடுவது, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் எல்லைகளை ஒட்டி ஈரான் தனது கட்டுப்பாட்டை வரைபடமாக்கியிருப்பது இராஜதந்திர ரீதியில் சிக்கல்களை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே முற்றியுள்ள மோதல் போக்கினால் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிபொருள் போக்குவரத்து ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், தனது கடற்படை பலத்தை நிலைநாட்டவும், வெளிநாட்டுக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் இந்த புதிய வரைபடத்தை ஈரான் ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

