ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள், சிறையில் கொடூரமான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொருளாதார வீழ்ச்சியால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். “முல்லாக்கள் வெளியேறுங்கள்” என்ற கோஷங்களுடன் இளம்பெண்கள் உள்ளிட்ட பலரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரிட்டனின் ‘டெய்லி எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி. சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு, உறைபனி போன்ற கடும் குளிரில் அவர்கள் மீது குழாய்கள் மூலம் குளிர்ந்த நீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது.
கைதிகளின் உடலில் அவர்களின் அனுமதியின்றி அடையாளம் தெரியாத மர்ம ஊசிகள் செலுத்தப்படுவதாகவும், அது அவர்களின் உடல் மற்றும் மனநிலையை மோசமாகப் பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை சுமார் 26,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உட்பட சுமார் 5,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள வீடியோக்களில், கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கருப்புப் பைகளில் சுற்றப்பட்டுத் தரையில் வீசப்பட்டிருப்பதும், உறவினர்கள் கதறி அழுதபடி உடல்களைத் தேடுவதும் பதிவாகியுள்ளன. இந்தப் போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ள போதிலும், மக்களின் கொந்தளிப்பு இன்னும் அடங்கவில்லை.
சர்வதேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஈரானின் இந்த நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.