கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அங்கிருந்து தனது முதல் பகிரங்க உரையை நிகழ்த்தியுள்ளார்.
டெல்லியில் உள்ள வெளிநாட்டு நிருபர்கள் சங்கத்தில் (FPC) ஒலிபரப்பப்பட்ட விசேட குரல் பதிவுச் செய்தி மூலம் அவர் ஆற்றிய உரையில், தற்போதைய இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். யூனுஸின் நிர்வாகத்தை “சட்டவிரோதமானது மற்றும் வன்முறையானது” என்று அவர் வர்ணித்துள்ளார்.
தனது உரையில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் கோரிக்கைகளை முன்வைத்தார். தற்போதைய சட்டவிரோத நிர்வாகம் அகற்றப்பட்டு, மீண்டும் ஜனநாயக முறைப்படியான ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும்.
பங்களாதேஷ் தெருக்களில் அரங்கேறும் வன்முறைகள் மற்றும் சட்டமின்மை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பெண்கள் மற்றும் மதச் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு செயற்பட வேண்டும்.
ஊடகவியலாளர்கள் மற்றும் அவாமி லீக் உறுப்பினர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
கடந்த கால வன்முறை நிகழ்வுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை (UN) ஒரு நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும்.
இந்திய மண்ணிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்துள்ள இந்த அறிக்கை, பங்களாதேஷின் தற்போதைய இடைக்கால அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் மேலும் சவால்களை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.