அம்மன் கோவில் குளியலறையில் இரகசிய கமெராக்கள்: அதிர்ந்து போன பக்தர்கள்

Temple CCTV

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன் பட்டியில் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள குளியலறைகளில் 3 இரகசிய கமெராக்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவில் வளாகத்தில் உள்ள குளியலறையில் குளிக்க சென்ற பெண் பக்தர் ஒருவர், அங்கு மறைவான இடத்தில் இரகசிய கமெரா பொருத்தப்பட்டிருந்தமைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, கோவில் நிர்வாகத்திடம் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து குளியலறைகள் முழுவதும் கோவில் ஊழியர்கள் சோதனை மேற்கொண்டதில், அங்கு மேலும் 2 இடங்களில் இரகசிய கமெராக்கள் இருந்தமையைக் கண்டுபிடித்து, விளாத்திகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, குளியலறைகளில் இருந்த 3 கமெராக்களையும் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றில் ஒரு கமெரா மட்டும் புளூடூத், மெமரி கார்டு, பென் டிரைவ் உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்டது என்றும், ஏனைய இரு கமெராக்கள் வயர் இணைப்புடன் செயற்படக்கூடிய சாதாரணமானது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் கோவில் குளியலறைகளில் கண்காணிப்பு கமெராக்களைப் பொருத்தியது யார் என்றும் அவற்றில் பதிவான குளியலறை காட்சிகளை யாரேனும் சேகரித்து வைத்துள்ளனரா? என்பது குறித்த விசாரணைகளில் பொலிஸார் களமிறங்கியுள்ளனர்.

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#IndiaNews

Exit mobile version